தமிழ்நாடு

அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்துவாங்கப்போகும் மழை! வானிலை மையம் தகவல்

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு... தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!

அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்துவாங்கப்போகும் மழை! வானிலை மையம் தகவல்
Tamil Nadu Weather Update
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 31) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை நிலவரம்:

தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அந்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய இடி, மின்னல் மழை பெய்யக்கூடும். இதுதவிர, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1, 2-ம் தேதிகளில் மழை வாய்ப்பு:

செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதுச்சேரியிலும் இதேபோன்ற வானிலை நிலவக்கூடும். மற்ற பகுதிகளில் சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

வெப்பநிலை நிலவரம்:

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

மற்ற பகுதிகளில் வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கான வானிலை அறிவிப்பு:

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னை மாநகரம் மட்டுமின்றி ஆவடி, அம்பத்தூர், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தமிழக கடலோரப் பகுதிகளில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். சில நேரங்களில் காற்றின் வேகம் 65 கி.மீ. வரை அதிகரிக்கலாம் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.