தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழையும், பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும்?
தமிழ்நாடு மற்றும் தெற்கு உள் கர்நாடகா பகுதிகளுக்கு இடையே நிலவும் வளிமண்டல மாற்றங்கள் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான சூழல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மழையுடன் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும்.
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !
இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இந்தப் பகுதிகளில் மழை பெய்யும்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், இடி மற்றும் மின்னலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களிலும் மழை பெய்யும் !
திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. மழையின்போது இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மற்ற மாவட்டங்களில் வானிலை எப்படி?
தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால் மழை பெய்யக்கூடிய பகுதிகளில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
வெப்பநிலை நிலவரம் என்ன ?
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.
சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. இதனால் மழை இல்லாத நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்படலாம்.
சென்னையில் இன்று மழை பெய்யுமா ?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய வானிலை நிலவரத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் அப்பகுதி மக்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.
LIVE 24 X 7









