தமிழ்நாடு

25 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்குமா? வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

25 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்குமா? வானிலை மையம் எச்சரிக்கை!
rain alert

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் இருந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை வடதமிழகம் மற்றும் வடகேரளம் வழியாக சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை எப்படி இருக்கும்?

அக்.4 முதல் 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.