அம்பேத்கர் வெளிநாட்டு உதவித்தொகை...விஜய் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்டாலின்!

அம்பேத்கர் வெளிநாட்டு உதவித்தொகை...விஜய் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்டாலின்!

அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் தவித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Author: Bhavani v தமிழ்நாடு

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி இருமடங்காக அதிகரிக்கப்பட்டு, ரூ.131 கோடியாக உயர்த்தப்பட்டது. இருப்பினும், உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது தவெக அரசுக்கு ஏன் காழ்ப்புணர்ச்சி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

RTI மூலம் பெறப்பட்ட தகவல்

தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 2026-27 கல்வியாண்டில் 365 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 164 பேர் மட்டுமே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர்.

முக்கிய விவரங்கள்:

1. மொத்தம் தேர்வு செய்யப்பட்டவர்கள் – 365.

2. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்தவர்கள் – 164.

3. இன்னும் சேராதவர்கள் – 201.

தவிக்கும் மாணவர்கள்

ரூ.19.53 கோடி உதவித்தொகை 65 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உதவித்தொகை வழங்குவதில் பல மாதங்களாகத் தாமதம் ஏற்படுவதால், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் கல்விக் கட்டணம், வீட்டு வாடகை மற்றும் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தவெக அரசைக் கண்டித்து, மாணவர்களுக்கு இன்னும் ஏன் உதவித்தொகை வழங்கப்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?

உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?

இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.

மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?

இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?

திராவிட மாடல் அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே! தவெக அரசை கண்டித்து பதிவிட்டுள்ளார்.