2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இலங்கைக்கு எதிரான 2வது அரையிறுதி ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய அணி தயாராகியுள்ளது. இதனால் ஆசிய விளையாட்டுத் தொடரின் கிரிக்கெட் இறுதிப்போட்டி மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா :
ஜப்பானின் நிஷின் நகரில் நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சற்று தடுமாற்றமாக அமைந்தது.
அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் தலா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 38 ரன்கள் சேர்த்தார்.
அவரைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 13 ரன்களிலும், திலக் வர்மா 2 ரன்களிலும், சிவம் துபே 3 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணியின் ரன் வேகம் ஒரு கட்டத்தில் சற்று குறைந்தது.
தனி ஆளாக போராடிய இஷான் கிஷன் :
இந்திய அணியின் இன்னிங்ஸை வலுப்படுத்திய முக்கிய வீரராக இஷான் கிஷன் மாறினார். 5வது வரிசையில் களமிறங்கிய அவர், இலங்கை பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
46 பந்துகளை சந்தித்த இஷான் கிஷன், 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 80 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். அவரது பொறுப்பான இன்னிங்ஸ் காரணமாக இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட ஓவர் முடிவில் நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்த பும்ரா :
170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கிய நிலையில், அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஜஸ்பிரித் பும்ரா தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தார். அதன்பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க, இலங்கை பேட்டர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 33 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. அந்த அணியின் பேட்டிங் வரிசையில் பல வீரர்கள் ரன் கணக்கையே தொடங்காமல் ஆட்டமிழந்தனர்.
45 ரன்களுக்கு ஆல் அவுட் :
இலங்கை அணியில் நுவனிது பெர்னாண்டோ மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.
இறுதியில் இலங்கை அணி 9.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 45 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய பந்துவீச்சாளர்களின் மிரட்டல் :
இந்திய அணியின் வெற்றியில் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது.
ஜஸ்பிரித் பும்ரா 2 ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் படேல் 3 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 8 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அபிஷேக் சர்மாவும் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதோடு இந்திய அணியின் பீல்டிங்கும் சிறப்பாக அமைந்தது. இலங்கை அணியின் மூன்று வீரர்கள் ரன் அவுட் செய்யப்பட்டனர்.
இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் :
இலங்கையை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி தற்போது தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா - பாகிஸ்தான் மோதல் ஆசிய விளையாட்டின் இறுதிப்போட்டியில் அரங்கேற உள்ளது.
தங்கப் பதக்கம் யாருக்கு என்பதற்கான போட்டியாக மட்டுமல்லாமல், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் சந்திக்க இருப்பதால் இந்த ஆட்டத்தின் மீதான கவனம் மேலும் அதிகரித்துள்ளது.
ஆசிய விளையாட்டின் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் களமிறங்கும் நிலையில், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என ஒவ்வொரு துறையிலும் யார் ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்புதான். அதுவும் ஆசிய விளையாட்டின் இறுதிப்போட்டியில் தங்கத்தை அடிக்கப்போவது யார் என்ற பதற்றத்தை விட இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனென்றால் , இந்தியா VS பாகிஸ்தான் என்பது FAVOURITE EPIC RIVALRY ஆச்சே.
LIVE 24 X 7









