அரசியல்

ஆட்சியமைப்பாரா விஜய்? ஆளுநர் விளக்கத்தால் பரபரப்பு!

ஆட்சி அமைக்க விஜய்யிடம் பெரும்பான்மை இடங்கள் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

ஆட்சியமைப்பாரா விஜய்? ஆளுநர் விளக்கத்தால் பரபரப்பு!
TN Governor
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்றைய தினம் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தவெக-வின் 108 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் என மொத்தம் 113 பேர் அடங்கிய ஆதரவுப் பட்டியலை அவர் வழங்கினார். இந்நிலையில், இன்று மீண்டும் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு, ஆட்சி அமைப்பதில் நிலவும் தாமதம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்கத்தில், தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தவெக-விடம் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத்தில் 118 இடங்களே பெரும்பான்மைக்கான இலக்காகும். ஆனால், விஜய் சமர்ப்பித்த பட்டியலில் 113 பேர் மட்டுமே உள்ளதால், தவெக தனது பெரும்பான்மையை இன்னும் நிறுவவில்லை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் குறித்து ஆளுநர் அர்லேகர் விஜயிடம் சில விளக்கங்களைக் கேட்டுள்ளார். ஆட்சி அமைக்கத் தான் அழைக்க வேண்டுமெனில், முதலில் தவெக தனது பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என்று ஆளுநர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதற்கிடையில், மீதமுள்ள ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தவெக தீவிரம் காட்டி வருகிறது.