அரசியல்

"போதைப்பொருள் பயன்படுத்திய அமைச்சர் சரத்..." உதயநிதியால் டென்ஷனான த.வெ.க.

சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.


Minister Sarathkumar vs Opposition Leader Udhayanidhi Stalin
சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.

நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடியது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் விடுதி வளாகத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவை கூடியதும் திருக்குறளுடன் பேரவை நடவடிக்கைகளை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக அரசு 100 நாட்களை நிறைவு செய்ததையொட்டி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அவர், அரசின் 100 நாள் சாதனைகளையும் எடுத்துரைத்தார்.

இதையடுத்து, மாணவர் அமுதன் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். மாணவர் கொலை சம்பவத்தை வெறும் கோஷ்டி மோதல் எனக் கருத முடியாது என்றும், இது மிகப்பெரிய பிரச்சினை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து போதைப்பொருள் விவகாரத்தையும் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் எழுப்பினார்.

“ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது”

என அவர் குற்றம்சாட்டினார். மேலும், ஐபிஎல் போட்டியில் தவெக அமைச்சர் பவுடர் பயன்படுத்தியதாக உதயநிதி பேசியபோது, தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அமைச்சர் தொடர்பான விவகாரத்தில் காவல்துறை விசாரணை நடத்தப்பட்டதா என்றும் உதயநிதி கேள்வி எழுப்பினார்.

“மாத்திரையை நுணுக்கியதாக கதைவிட்ட தவெக அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா?”

என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

போதைப்பொருள் கடத்தல் மன்னன் தொடர்பான விவகாரத்தில் திமுக ஆட்சியில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் உதயநிதி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சரத், ஐபிஎல் போட்டி நடைபெற்ற ஸ்டேடியம் தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“ஸ்டேடியத்தில் நடந்தவற்றைப் பற்றி விளக்கம் அளித்துவிட்டேன். ஆதாரம் இன்றி தேவையின்றி பேசக்கூடாது”

என்று அமைச்சர் சரத் கூறினார்.

மேலும், சம்பந்தப்பட்ட நிகழ்வு திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்பனை நடைபெற்றதாக ஒப்புக்கொள்கிறீர்களா என எதிர்க்கட்சியினரிடம் கேள்வி எழுப்பினார்.

“திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது. அப்படியென்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா?”

என அமைச்சர் சரத் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக ஏன் சட்டப்பேரவையில் விவாதிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பிய கே.என். நேரு, அமைச்சர் பதில் அளிக்க வேண்டியது பவுடர் பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக மட்டுமே என தெரிவித்தார்.

“கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார்? பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும்”

என கே.என். நேரு கூறினார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அரசு சார்பில் முறையான பதில் கிடைக்கவில்லை என்று வெளிநடப்பு செய்தது திமுக.

இந்நிலையில், அமைச்சர் சரத்குமார் குறித்து எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் " எங்கள் கழகத்தின் உறுப்பினர்கள் யாராவது இதுபோன்று செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம், ஏன் இந்த அரசு செய்யவில்லை." என்றும்,

அதுமட்டுமின்றி அமைச்சர் சரத்குமாரின் கேள்விக்கு பதிலளித்த அவர் " அப்படினா, அவர் போதை பொருள் பயன்படுத்தியதை ஒத்துக்கிறாரா,அவரு கேட்டுச்சொல்லுங்க" என்று உதயநிதி பதிலளித்தார்.


மாணவர் அமுதன் கொலை விவகாரம், போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் என அடுத்தடுத்து எழுந்த பிரச்சினைகளால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.