மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு, சினிமா நட்சத்திரங்களை வைத்து புதிய கட்சிகளைத் தொடங்கச் செய்து மாநிலக் கட்சிகளைப் பலவீனப்படுத்தும் சதித் திட்டத்தில் பாஜக ஈடுபட்டு வருவதாக விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் எம்பி-யுமான ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் நீக்கம் - சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை
புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற அஞ்சுமன் நூற்றாண்டு நூலக அறிவு திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எம்பி ரவிக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வாக்காளர் சிறப்புத் திருத்தப் பட்டியலில் விழுப்புரம் மக்களவை தொகுதியில் 1 லட்சத்து 82,000 வாக்காளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், வானூர் தொகுதியில் 25,000 வாக்காளர்களும், கோட்டக்குப்பம் நகராட்சியிலும் அதிக அளவில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, சிறப்பு முகாம்கள் நடத்தி நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வாக்குகளைச் சிதறடிக்கும் பாஜக யுக்தி
தொடர்ந்து பேசிய அவர், வடமாநிலங்களில் பாஜக மிகப்பெரிய செல்வாக்குச் சரிவைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார். தென் மாநிலங்களில் எப்படியாவது வாக்கு விகிதங்களைப் பெற்று சமாளிக்க முயலும் பாஜக, திரைப்பட நட்சத்திரங்களைப் பயன்படுத்தி மாநிலக் கட்சிகளைப் பலவீனப்படுத்துவதோடு, வாக்குகளையும் சிதறடிக்கும் யுக்தியைக் கையாண்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பின்னால் பாஜக உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த ரவிக்குமார், தவெக மதச்சார்பற்ற நிலைப்பாட்டை உறுதியாகக் கொண்டிருப்பதாகவும், பாஜக கொள்கைகளை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதேசமயம், பாஜக சொல்லி விஜய் கட்சி ஆரம்பித்தார் என்று கூற முடியாது என்றாலும், இதுபோன்ற பல அரசியல் நிகழ்வுகளைப் பின்புறமாக பாஜக அரங்கேற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனுஷ் & சிவகார்த்திகேயன்
தமிழ்நாடு அரசியலில் நடிகர் தனுஷ் களமிறங்க உள்ளதாகவும், இதற்குப் பின்னால் பாஜகவின் ஆதரவு இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாகப் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மேலும், நடிகர் சிவகார்த்திகேயனும் எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் போலத் தன் ரசிகர் மன்றங்களை மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நடிகர்களால் மட்டுமே அரசியலில் வெல்ல முடியும் என்பதற்கு நடிகர் விஜய்தான் தற்போதைய எடுத்துக்காட்டு என்று தவெகவினர் பெருமிதம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









