தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திராவிடக் கட்சிகளின் வெற்றியைப் பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி மோதலும், சசிகலா மற்றும் கிருஷ்ணசாமியின் கட்சிகள் பிரித்த வாக்குகளும் கணிசமாகப் பாதித்துள்ளன.
டெபாசிட் இழந்த ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே நிலவி வரும் மோதலால், இருவரும் தனித்தனி அணிகளாகத் தேர்தலைச் சந்தித்தனர். அன்புமணி ராமதாஸ் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியிலும், டாக்டர் ராமதாஸ் சசிகலாவுடனும் இணைந்து வேட்பாளர்களைக் களமிறக்கினர். இதில் விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அன்புமணி தரப்பு வேட்பாளர்களான கணேஷ்குமார் மற்றும் சிவக்குமார் வெற்றி பெற்றனர். மேலும், அன்புமணி தரப்பு பாமகவினர் போட்டியிட்ட 18 இடங்களிலும் அவர்களை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தரப்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தனர்.
திராவிடக் கட்சிகளின் வெற்றியைத் தடுத்த சசிகலா, கிருஷ்ணசாமி
தமிழகத்தின் பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பைச் சசிகலாவின் 'அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்' மற்றும் கிருஷ்ணசாமியின் 'புதிய தமிழகம்' கட்சிகள் சிதைத்துள்ளன. திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் 10,643 வாக்குகளைப் பெற்றதால், திமுக வேட்பாளர் மிகக் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதேபோல், ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுக வேட்பாளர் வெறும் 1,186 வாக்குகள் வித்தியாசத்தில் தவெகவிடம் வெற்றியைப் பறிகொடுக்கப் புதிய தமிழகம் கட்சி பிரித்த 1,015 வாக்குகளே காரணமாக அமைந்தது.
மன்னார் குடியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் சசிகலா தரப்பு வேட்பாளர் பிரித்த 1,949 வாக்குகள் முக்கியப் பங்கு வகித்தன. சாத்தூரில் பாஜக வேட்பாளருக்கும் திமுகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவிய சூழலில், சசிகலா கட்சியின் வேட்பாளர் 11 ஆயிரம் வாக்குகளைப் பிரித்து அதிர்ச்சி அளித்தார். கோவில்பட்டி மற்றும் உசிலம்பட்டியிலும் சசிகலா மற்றும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் பிரித்த வாக்குகள், திராவிடக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைத் தவெக வேட்பாளர்களுக்குச் சாதகமாக மாற்றியுள்ளன.
LIVE 24 X 7









