தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி டெல்லியில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளும், போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதும் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.
டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த முயன்றவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிர்வாகிகள் அபிஜித் தீப்கே, சௌரவ் தாஸ் உள்ளிட்டோரும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர். இதற்கிடையே, போராட்டங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சியினரும் சமூகச் செயல்பாட்டாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இண்டி கூட்டணி தலைவர்கள் கைது…!
டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் பங்கேற்க முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான மமதா பானர்ஜி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறை கைது செய்து காவலில் எடுத்துள்ளது. இப்படி இண்டிக் கூட்டணி கட்சித் தலைவர்கள், சிபிஜே தலைவர்கள், மாணவர்கள், போராட்டக்கார்ர்கள் என கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகுல் காந்தி மீது விமர்சனம் ஏன்?
இந்த நிலையில், இண்டி கூட்டணியில் காங்கிரஸ் முக்கியப் பங்கு வகித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் அக்கட்சி எத்தகைய பங்களிப்பைச் செய்கிறது என்ற விவாதமும் எழுந்துள்ளது. குறிப்பாக, போராட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களின் நடவடிக்கைகள் மற்றும் காங்கிரஸின் அரசியல் வியூகங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ராகுல் காந்தி சென்னையில் முதலமைச்சர் விஜய்யுடன் விருந்தில் பங்கேற்றது விமர்சனத்துக்கான பேசுபொருளாக முன்வைக்கப்படுகிறது. பாலவாக்கத்தில் கிரிக்கெட் வீர்ர் எம்.எஸ்.தோனிக்கு சொந்தமான கஃபேவில் இருவரும் காஃபி அருந்தியதிய நிலையில், டெல்லி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், ஆனால் இங்கே விஜய்யுடன் காஃபி குடித்துக் கொண்டிருக்கிறார் ராகுல்காந்தி என்று விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
போராட்டம் ஒருபக்கம்... அரசியல் கேள்விகள் மறுபக்கம்!
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையமும் அரசுத் தரப்பும் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதும் முக்கியமானதாக உள்ளது. அதே நேரத்தில், போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாகவும் பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இத்தகைய சூழலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்த விவாதமும் தீவிரமடைந்துள்ளது.
LIVE 24 X 7









