அரசியல்

செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரெய்டு.. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

"தேர்தல் பிரசார நேரத்தில் எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரெய்டு.. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
CM Stalin
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனைமேற்கொண்டு பிரசாரம் செய்ய விடாமல் முடக்கிவைத்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.-வாகவும், அதே தொகுதியின் வேட்பாளராகவும் உள்ள செல்வப்பெருந்தகை, தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்தபோது வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னைச் சிறைப்பிடித்துள்ளதாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பிரசாரத்தின் இறுதி நேரத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளை முடக்கும் முயற்சி என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தோல்வி பயத்தில் பாஜவின் சதி

இந்த விவகாரம் குறித்துப் எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களது பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்குக் கடும் கண்டனம்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறை மறுப்பு

இந்த நிலையில், செல்வப்பெருந்தகை முன்வைத்த குற்றசாட்டை வருமான வரித்துறை மறுத்துள்ளது. "செல்வ பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை. ராகுலின் பிரசாரத்திற்கு செல்ல விடாமல் தடுத்ததாக, செல்வபெருந்தகை கூறுவது உண்மையில்லை. அவரது வீடு உள்ளிட்ட எங்கும் சோதனை நடத்தவில்லை" என தெரிவித்துள்ளது.