அரசியல்

மகளிருக்கு ரூ.1000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

"மகளிருக்கு ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?" என்று மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மகளிருக்கு ரூ.1000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!
CM Vijay and MK Stalin
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மாதம் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "முதலமைச்சர் அவர்களே,

மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?

திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.