கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் புகாரில், அத்தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக தரப்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான அருள் விக்னேஷ், அம்மாவட்டத்தின் பெண் ஆட்சியருக்குத் தொலைபேசி மூலம் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
இதற்கிடையே, நேற்று தவெக சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையூறு விளைவிப்பது தெரியவந்தால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அருள் விக்னேஷ் மீது கட்சித் தலைமை தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
டிஜிபி அலுவலகத்தில் புகார்
தமிழ்நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ள இந்த விவகாரத்தில், அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி திரிசூலி என்பவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது மட்டுமின்றி, ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் அவர் அத்துமீறி நுழைந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதை அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சியர் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட பின்னரும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது கவலை அளிப்பதாகவும் அதிமுக நிர்வாகி அளித்துள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோரிக்கை
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









