அரசியல்

திமுகவுடனான உறவை முறித்து கொண்ட காங்கிரஸ்.. தவெகவுக்கு ஆதரவு!

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

திமுகவுடனான உறவை முறித்து கொண்ட காங்கிரஸ்.. தவெகவுக்கு ஆதரவு!
Congress & TVK
தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது.

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என விஜய் தன்னிடம் கேட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டியே முடிவு செய்யலாம் என்றும் கூறினார்.

இதனிடையே நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவு செய்ய சென்னையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு இந்திய தேசிய காங்கிரஸிடம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அரசியலமைப்பு கோட்பாடுகளை நம்பும் ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் நலன்புரி அரசாங்கத்திற்கு மிகவும் தெளிவான, வலுவான மற்றும் பெருவாரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர். அடுத்த ஆட்சியை அமைப்பதற்காக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவில் மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் நலன்புரி அரசியலுக்காக நிற்கிறது, மேலும் அதுவே அதனை நிறுவிய அரசியல் கட்சியாகும். தமிழக மக்களின் இந்த ஆணையை மதிப்பதும், நிலைநிறுத்துவதும், நிறைவேற்ற உதவுவதும் நமது அரசியலமைப்பு கடமையாகும். அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும், ஆட்சி அமைப்பதற்கு தவெகவுக்கு தங்களின் முழு ஆதரவையும் வழங்க முடிவு செய்துள்ளன.

இந்திய அரசியலமைப்பை நம்பாத எந்தவொரு மதவாத சக்திகளையும் இந்தக் கூட்டணியிலிருந்து த.வெ.க. விலக்கி வைத்தால் மட்டுமே எங்கள் ஆதரவு.

த.வெ.க. மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இடையேயான இந்தக் கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் அரசியலமைப்பு இலட்சியங்களுக்கு வலுவான அர்ப்பணிப்புடன், வரும் ஆண்டுகளில் மற்றும் பத்தாண்டுகளில் பெருந்தலைவர் காமராஜரின் தமிழ்நாட்டின் பொற்காலத்தை மீட்டெடுக்க பாடுபடும்.

இரு கட்சிகளுக்கும் இடையே பரஸ்பர மரியாதை, உரிய பங்கு மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்தக் கூட்டணி, இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான எதிர்காலத் தேர்தல்களுக்கும் பொருந்தும்.

விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர், மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசாங்கத்திற்கான தமிழ்நாட்டு மக்களின் இந்த வரலாற்றுத் தீர்ப்பை மதிக்கவும், மக்களின், குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவும் கூட்டாக உறுதியளிக்கின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.