அரசியல்

முன்னாள் முதல்வர்கள் கைது: நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை.. மத்திய அரசைச் சாடிய ஸ்டாலின்!

எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் கைது: நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை.. மத்திய அரசைச் சாடிய ஸ்டாலின்!
MK Stalin

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமலில் இருப்பதாகத் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அறிவிக்கப்படாத அவசரநிலை: ஜனநாயகத்தை காப்பவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள், ஆனால் அதற்கு துரோகம் இழைப்பவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கப் போராடியதற்காக முன்னாள் முதலமைச்சர்களான பிணராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மமதா பனர்ஜி, மாணிக் சர்க்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்களை மத்திய பாஜக அரசு தடுப்புக் காவலில் அடைத்துள்ளது.

ஆனால், தேசத்துரோகச் செயலுக்காக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் Z+ பாதுகாப்புடன் சுதந்திரமாக உலா வருகிறார். இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு.

எஸ்ஐஆர் பின்னணியில் உள்ள சதி முழுமையாக அம்பலமாகிவிட்டது. இனியும் அதை மறைக்க முடியாது. டெல்லியைப் பூட்டி வைப்பதாலோ, இணையச் சேவையைத் துண்டிப்பதாலோ, அரசியல் தலைவர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதாலோ இந்திய இளைஞர்களின் எழுச்சியை அடக்க முடியாது. ஒட்டுமொத்த நாட்டையும் எத்தனை நாள்களுக்குத்தான் மத்திய அரசால் முடக்கி வைத்திருக்க முடியும்?

இதற்கிடையில், தமிழ்நாட்டில் உள்ள மூடர்கூடத் தவெக அரசு, தனது டெல்லி எஜமானர்களைத் திருப்திப்படுத்தத் துடிக்கிறது. அதற்காக எஸ்ஐஆருக்கு எதிராகவும் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் போராடும் செயற்பாட்டாளர்களைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். எஸ்ஐஆர் நிறுத்தப்பட வேண்டும். இந்திய மக்களுக்குத் துரோகம் இழைத்த அனைவரும் உரிய விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.