இந்தியா

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்: 17 பேர் மீது குற்றச்சாட்டு !

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் காணிக்கை பணத்தில் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என எஸ்ஐடி முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்: 17 பேர் மீது குற்றச்சாட்டு !
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் உண்டியல் காணிக்கை பணத்தில் பெருமளவு முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT), தனது முதற்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையில், காணிக்கை பணம் மற்றும் பக்தர்கள் வழங்கிய மதிப்புமிக்க பொருட்களை கையாள்வதில் கடுமையான நிர்வாக குறைபாடுகள் இருந்ததாகவும், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் பல்வேறு சீர்கேடுகள் கண்டறியப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்ட சில ஊழியர்களின் சொத்து மதிப்பு திடீரென உயர்ந்திருப்பதும் விசாரணையில் கவனத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரொக்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா டிரஸ்ட் அறக்கட்டளையுடன் தொடர்புடைய நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 17 பேரை எஸ்ஐடி தனது அறிக்கையில் குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களாக குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அறக்கட்டளையின் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் செய்யவும், மூத்த அதிகாரி ஒருவரை நிர்வாக பொறுப்பில் நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதால், அனைத்து குற்றச்சாட்டுகளும் இறுதி விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.