அண்மை

வைரலான ஐபிஎல் வீடியோ விவகாரம்... விளக்கம் அளித்த அமைச்சர் !

போதைப்பொருள் பயன்படுத்தவில்லை... குழந்தைக்காக மாத்திரையை பொடியாக்கினேன்" என்று சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ குறித்து மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

வைரலான ஐபிஎல் வீடியோ விவகாரம்...  விளக்கம் அளித்த அமைச்சர் !
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சிலர் குற்றம்சாட்டி பதிவுகளை பகிர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விளக்கமளித்து அமைச்சர் சரத்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், "இன்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த பிறகே இந்த வதந்தி பரவத் தொடங்கியது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஐபிஎல் போட்டியை பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது உடல்நலக்குறைவால் மாத்திரையை விழுங்க மறுத்த குழந்தைக்காக, அதை பொடியாக்கி தண்ணீரில் கலந்து கொடுத்தேன். அதைத்தான் தற்போது போதைப்பொருள் பயன்படுத்தியது போல தவறாக சித்தரித்து பரப்புகின்றனர்" என்று கூறியுள்ளார்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்த மைதானத்தில் அப்படி ஒரு செயல் எப்படி சாத்தியமாகும்? உண்மையை அறியாமல் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்" என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவரது மனைவியும் தனியாக விளக்கம் அளித்து, வீடியோ குறித்து பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று தெரிவித்துள்ளார்.