வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் எல் நினோ (El Niño) நிலைமைகள் உருவாகி, வரும் மாதங்களில் வேகமாக வலுப்பெறும் என WMO தெரிவித்துள்ளது. அதன் மாதாந்திர Global Seasonal Climate Update அறிக்கையின்படி, 2026 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் எல் நினோ தீவிரமடைந்து வலுவான கட்டத்தை எட்டும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பல சர்வதேச காலநிலை மையங்களின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கையில், மத்திய மற்றும் கிழக்கு சமவெளிப் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில பகுதிகளில் பருவகால சராசரி வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸுக்கும் மேல் அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எல் நினோவின் தாக்கம் அதன் தீவிரம், நீடிப்பு காலம், பருவநிலை மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனைப் பருவநிலை (Indian Ocean Dipole) போன்ற காரணிகளின் தாக்கத்தைப் பொறுத்து மாறுபடும் என WMO தெரிவித்துள்ளது.
ஜூலை–செப்டம்பர் காலகட்டத்தில் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இந்திய துணைக்கண்டம், வெப்பமண்டல இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழைப்பொழிவு குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், எல் நினோ உலகளாவிய வெப்பநிலையை மேலும் உயர்த்தக்கூடும். இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வறட்சி நிலை தீவிரமடைய வாய்ப்புள்ள நிலையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை அதிக மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் உலக நாடுகள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என WMO வலியுறுத்தியுள்ளது.
LIVE 24 X 7









