பொதுவாக விவாகரத்துக்குப் பிறகு முன்னாள் தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது உண்டு. ஆனால், இங்கே கதை வேறு. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே பிரிந்து வாழத் தொடங்கிய டோபி மாகுவேரும் ஜெனிஃபர் மேயரும், தங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த பின்னரும் நட்புடன் தொடர்கின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
விவாகரத்து முடிந்த சில வாரங்களிலேயே திருமணம்!
ஜெனிஃபர் மேயர், இசைத்துறை நிர்வாகியான ஜெஃப்ரி ஓகுன்லேசியை அக்டோபர் 10-ம் தேதி ஹவாயில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ரிசார்ட் லனாயில் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தில் குடும்பத்தினர் மட்டுமின்றி ஹாலிவுட் மற்றும் தொழில்துறை பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஜெனிஃபர் மேயருக்கும் டோபி மாகுவேருக்கும் இடையிலான விவாகரத்து சட்டப்பூர்வமாக இறுதி செய்யப்பட்ட சில வாரங்களிலேயே இந்தத் திருமணம் நடைபெற்றிருப்பதுதான்.
திருமணத்தில் ஜெனிஃபர் மேயர் வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் மற்றும் நீண்ட முக்காடு அணிந்திருந்தார். ஜெஃப்ரி ஓகுன்லேசி கருப்பு நிற கோட், சூட் மற்றும் போ டை அணிந்து மணமகனாகக் காட்சியளித்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையின் கீழ் இருவரும் திருமண உறுதிமொழிகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இந்த நிகழ்வில், மணமக்களின் திருமணச் சடங்குகளை டோபி மாகுவேர் முன்னின்று நடத்திய புகைப்படங்கள் கவனம் பெற்றுள்ளன.
முன்னாள் மனைவியின் திருமணத்தில் ஸ்பைடர்மேன்!
டோபி மாகுவேர் மற்றும் ஜெனிஃபர் மேயர் இருவரும் கடந்த 2003-ம் ஆண்டு சந்தித்துக்கொண்டனர். காதலித்த இருவரும் 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ரூபி, ஓடிஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஒன்பது ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த இந்தத் தம்பதி, 2016-ம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். பின்னர், 2020-ம் ஆண்டு ஜெனிஃபர் மேயர் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். நீண்ட சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, 2026 அக்டோபரில் இவர்களது விவாகரத்து சட்டப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டது.
இத்தனை ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தாலும், இருவரும் தங்களது குழந்தைகளுக்காகவும் தனிப்பட்ட நட்புக்காகவும் நல்ல உறவைத் தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடாகவே, தனது முன்னாள் மனைவியின் திருமணத்தை டோபி மாகுவேர் முன்னின்று நடத்தியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருமணத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ!
ஜெனிஃபர் மேயர் – ஜெஃப்ரி ஓகுன்லேசியின் திருமணத்தில் ஹாலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. டோபி மாகுவேரின் நீண்டகால நண்பரான நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, தனது காதலி விட்டோரியா செரெட்டியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது மனைவி லாரன் சான்செஸ் பெசோஸ், நடிகை கோர்ட்னி காக்ஸ் உள்ளிட்ட பிரபலங்களும் திருமணத்தில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
மணமகன் ஜெஃப்ரி ஓகுன்லேசி, நைஜீரியாவில் பிறந்த வழக்கறிஞரும் முதலீட்டு வங்கியாளருமான அடேபாயோ ஓகுன்லேசியின் மகன். இசைத்துறையில் பணியாற்றி வரும் அவர், வார்னர் மியூசிக் குரூப் மற்றும் 300 என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தொடர்புடையவராக இருந்துள்ளார்.
ஐந்து மாதங்களுக்கு முன்புதான் பெண் குழந்தை!
ஜெனிஃபர் மேயரும் ஜெஃப்ரி ஓகுன்லேசியும் 2023-ம் ஆண்டு முதல் காதலிப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, 2024 ஆகஸ்ட் மாதம் இருவரும் தங்களது நிச்சயதார்த்தத்தை அறிவித்தனர். இந்தத் தம்பதிக்கு 2026 மே மாதம் பெண் குழந்தை பிறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிஃபர் மேயர், ஹாலிவுட்டில் பிரபலமான நகை வடிவமைப்பாளர். திரைப்படத் துறையின் முன்னாள் நிர்வாகியான ரான் மேயரின் மகளான இவர், தனது பெயரிலேயே நகை வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
விவாகரத்து முடிந்த சில வாரங்களிலேயே முன்னாள் மனைவியின் திருமணத்தில் பங்கேற்றதோடு, அவருக்குத் திருமணமும் நடத்தி வைத்திருக்கிறார் ஸ்பைடர்மேன் டோபி மாகுவேர்.
காதல் முடிந்தாலும் நட்பு முடிய வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இந்த ஹாலிவுட் ஜோடி ஓர் உதாரணமா? முன்னாள் மனைவியின் புதிய வாழ்க்கையை முன்னின்று தொடங்கி வைத்த டோபி மாகுவேரின் செயல், ஹாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
LIVE 24 X 7









