சினிமா

"நானும் சிஎம் ஆவேன், நீங்க அழணும்"- விஜய், த்ரிஷாவை வம்புக்கு இழுத்த மலையாள நடிகர்!

மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன், முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விஸா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Dhyan Sreenivasan
மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் தனது புதிய படத்தின் ப்ரமோஷன் நிகழ்வில், தமிழக முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழா மற்றும் நடிகை த்ரிஷா கலந்துகொண்ட நிகழ்வை ஒப்பிட்டு நகைச்சுவையாகப் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்பதற்கு முன்பும் பின்பும் பல்வேறு அரசியல் மற்றும் தனிப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, அவரது குடும்ப வாழ்க்கை குறித்தும், முன்னணி நடிகை ஒருவருடன் இணைத்தும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் கிளம்பின. பலரும் அது நடிகை த்ரிஷா தான் எனக் கூறி வந்த சூழலில், விஜய் பங்கேற்ற சில முக்கிய நிகழ்ச்சிகளில் த்ரிஷா கலந்துகொண்டது பேசுபொருளானது. இதில் முக்கியமாக, விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில் நடிகை த்ரிஷா புடவை அணிந்து வந்து நெகிழ்ச்சியுடன் கண் கலங்கிய நிகழ்வு ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் உற்றுநோக்கப்பட்டது.

ராகுல் முரளீதரன் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன், நவ்யா நாயர் இணைந்து நடிக்கும் 'விசிட்டர்' (Visitor) திரைப்படத்தின் தொடக்க விழாவில் இந்த ஒப்பீடு அரங்கேறியுள்ளது. மேடையில் பேசிய தியான், "நவ்யா நாயருக்குத் திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில், நாங்கள் இப்போது ஒரு படத்தில் இணைகிறோம். எனினும், நான் ஒரு நாள் முதலமைச்சராகப் பதவியேற்கும்போது, நவ்யா நாயர் முன் வரிசையில் புடவை அணிந்து, கண்ணீரோடு நெகிழ்ச்சியாக அமர்ந்திருப்பார் என நம்புகிறேன்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். தியான் யாருடைய பெயரையும் நேரடியாகக் கூறவில்லை என்றாலும், அவர் தமிழக முதல்வர் விஜய்யின் பதவியேற்பையும், த்ரிஷா கண் கலங்கியதையும் சுட்டிக்காட்டித்தான் பேசுகிறார் என்பதை நெட்டிசன்கள் உடனடியாக ஒப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

தியான் ஸ்ரீனிவாசன் இவ்வாறு பேசியதைக் கேட்டு கீழே அமர்ந்திருந்த நவ்யா நாயர் விழுந்து விழுந்து சிரித்தார். மலையாள திரையுலகில் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இவர்கள் இருவருக்கும் தனித்தனியே திருமணங்கள் முடிந்துவிட்டன. தியான் 2017-ல் அர்பிதா என்பவரையும், நவ்யா 2010-லேயே சந்தோஷ் என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர். எனினும், தனது டீனேஜ் பருவத்தில் நவ்யா நாயர் மீது தனக்கு ஒரு பெரிய ஈர்ப்பு (Crush) இருந்ததாகவும், அவரைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும் தியான் ஜாலியாகக் குறிப்பிட்ட பழைய நினைவுகளோடு, இந்த தற்போதைய பதவியேற்பு ஒப்பீட்டுப் பேச்சையும் ரசிகர்கள் ஒரு சுவாரசியமான திரையுலக நகைச்சுவையாகக் கடந்து வருகின்றனர்.