“துரோகம் செய்தது நீங்கதான்!” – “பிச்சை எடுத்தது நீங்கதான்!”... தவெக – அதிமுக மோதல்!

தமிழ்நாடு அரசியலில் தவெகவும் அதிமுகவும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து, பாஜக கூட்டணி முதல் ஆட்சியமைத்த விதம் வரை இரு தரப்பும் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

“துரோகம் செய்தது நீங்கதான்!” – “பிச்சை எடுத்தது நீங்கதான்!”... தவெக – அதிமுக மோதல்!
தவெக விமர்சனம் என்ன?

அதிமுகவை விமர்சித்துள்ள தவெக, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்ததன் மூலம் மக்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தையும் முன்வைத்து, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் அதிமுக செயல்பட்டதாக விமர்சித்துள்ளது.

மேலும், கட்சியின் கொள்கைகளை மறந்து சுயநலத்துடன் செயல்படுவதாகவும், அரசியல் எதிரிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் பிறரை விலைக்கு வாங்கி வெற்றிபெற முயற்சிப்பதாகவும் தவெக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தனது விமர்சனத்தில் “துரோகம்”, “முதுகுக்குத்து” போன்ற கடுமையான வார்த்தைகளையும் தவெக பயன்படுத்தியுள்ளது.

அதிமுக கொடுத்த பதிலடி!

இதற்குப் பதிலளித்த அதிமுக, தவெக ஆட்சியமைப்பதற்காக மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்றதை விமர்சித்துள்ளது. இதனை “பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது” என்று சாடியுள்ள அதிமுக, பிற கட்சி எம்.எல்.ஏ-க்களை இணைத்துக்கொண்டு ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்திப்பது, சட்டமன்றத்தில் கேள்விகளை எதிர்கொள்வது, கரூர் சம்பவத்தின்போது நடந்துகொண்ட விதம் ஆகியவற்றையும் அதிமுக தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியுடனான தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கிய அதிமுக, நீட் தேர்வு மற்றும் இலங்கைத் தமிழர் விவகாரங்களையும் தனது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளது.

இரு தரப்பும் பயன்படுத்தியுள்ள கடுமையான வார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. தேர்தல் அரசியலில் இந்த வார்த்தைப் போர் மேலும் தீவிரமடையுமா என்பதே தற்போதைய கேள்வி.