தமிழ்நாடு
ரயில் சக்கரத்தில் சிக்கிய இளம் பெண்.. இரு கால்களை இழந்த சோகம்
குளித்தலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்துள்ளார்.
சேலத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று காரைக்குடி சென்று கொண்டிருந்த நீலா (27) என்ற இளம் பெண், கரூர் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 1-ல் ரயில் நின்றபோது தண்ணீர் பாட்டில் வாங்க கீழே இறங்கியுள்ளார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறும் முயற்சியில், ரயில் புறப்பட்டதால் கால் தவறி பிளாட்பார்ம் மற்றும் ரயிலுக்கு இடையே விழுந்துள்ளார்.
மேலும் அவர் ரயில் சக்கரத்தில் சிக்கியதால் தனது இரு கால்களையும் இழந்தார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட நீலா, குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குளித்தலை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.