சம்பவத்தின் பின்னணி:
திருநெல்வேலியைச் சேர்ந்த அல்போன்ஸ் (35) என்பவர் பெங்களூரு, கே.பி. அக்ராகரம் பகுதியில் மிச்சர் கம்பெனி நடத்தி வருகிறார். அவரது கம்பெனியில் கே.பி. அக்ரகாரத்தைச் சேர்ந்த பவன்குமார் (19) என்பவர் மாஸ்டராகப் பணிபுரிந்து வந்தார்.
பவன்குமாருக்கும், கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவி சத்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது அல்போன்ஸுக்குத் தெரியவரவே, நான்கு மாதங்களுக்கு முன்பு பவன்குமார் வேலையை விட்டு நின்றுள்ளார். அதன் பின்னர் பவன்குமார் திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு, மரிமாணிக்குப்பத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி வந்துள்ளார். ஆனாலும், சத்யாவும் பவன்குமாரும் செல்போனில் பேசித் தொடர்ந்து சந்தித்துள்ளனர்.
ஓனர் அல்போன்ஸின் பழிவாங்கல்:
இதனால் ஆத்திரமடைந்த அல்போன்ஸ், மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சத்யா இது குறித்து அல்போன்ஸ் மீது பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அங்கு விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், ஆத்திரம் உச்சக்கட்டத்துக்குச் சென்ற அல்போன்ஸ், பவன்குமாரைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டார். நேற்று, பவன்குமாரின் தம்பி சந்தோஷ்குமாரை (17) காரில் கடத்திச் சென்று அடித்துத் துன்புறுத்தியுள்ளார். மிட்டூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அறை எடுத்துச் சந்தோஷ்குமாரை அடித்து, கையை உடைத்து, பவன்குமார் இருக்கும் இடத்தைக் கேட்டுள்ளனர்.
கொடூரக் கொலை:
சந்தோஷ்குமாரை அழைத்துக்கொண்டு இன்று (அக். 1, 2025) அதிகாலை 4 மணியளவில் நண்பன் பார்த்திபன் உட்பட 3 பேருடன் அல்போன்ஸ், பவன்குமாரின் பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, சந்தோஷ்குமாரை முதலில் கதவைத் தட்டச் செய்ய, கதவைத் திறந்த பவன்குமாரின் தாய் மீராபாய், சந்தோஷ்குமாரைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே, மறைந்திருந்த அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். பவன்குமாரைத் தேடிச் சென்று அவரைக் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பவன்குமார், 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை மற்றும் தேடுதல்:
அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்களால் அடிபட்ட சந்தோஷ்குமார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து சென்ற குரிசிலாப்பட்டு போலீசார், பவன்குமாரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், தப்பி ஓடிய அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் மூவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வேலை பார்த்த இடத்தில் ஓனரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தால் இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









