சென்னை: இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் பிரம்மாண்டமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. இதனால் சென்னையின் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வான் சாகச நிகழ்ச்சி முடிந்த பின்னரும், பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் ரொம்பவே அவதிக்குள்ளாகினர். கடற்கரை சாலை, அண்ணா சாலை உட்பட மெரினாவை சுற்றியுள்ள அனைத்து சாலைகளில் வாகனங்கள் நகரவே முடியாமல் ஸ்தம்பித்து நின்றன.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து விமான சாகச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். குடிநீர் உட்பட அத்தியாவசியத் தேவைகளை கூட தமிழக அரசு சரியாக செய்யவில்லை எனக் கூறியிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த வரிசையில் தவெக தலைவர் விஜய்யும் இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள தவெக தலைவர் விஜய், சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில், அடிப்படை, அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்த வேண்டும். இனிவரும் காலங்களில் இதில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
LIVE 24 X 7









