தமிழ்நாடு

TN Weather: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Heavy Rain
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை, தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. இதனால், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கு அடுத்த 24 மணிநேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும்.

கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல், நாளை (அக்.23) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை - மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.