தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: டிசம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வரும் செவ்வாய்க்கிழமைக்கு (டிசம்பர் 9) ஒத்திவைத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: டிசம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
Madurai Highcourt Bench
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வரும் செவ்வாய்க்கிழமைக்கு (டிசம்பர் 9) ஒத்திவைத்துள்ளார்.

மதுரை உயர் நீதிமன்ற உத்தரவுகள்

கார்த்திகை தீபத்தையொட்டி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதோடு, இன்று (டிசம்பர் 5) காலை 10.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படாமல், தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் மனுவை வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 8) விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு

இன்று (டிசம்பர் 5) காலை மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையேற்றுக்கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழக்கைச் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொள்வதாக ஒத்தி வைத்துள்ளார்.