தமிழ்நாடு

ஜன. 6-ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.. முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை!

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜன. 6-ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.. முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை!
Tamil Nadu Cabinet meeting
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜனவரி 6 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 ஆம் தேதி தமிழகச் சட்டமன்றம் கூட உள்ள நிலையில், இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சட்டமன்றக் கூட்டத்திற்கான ஆயத்தப் பணிகள்

ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் என்பதால், மரபுப்படி ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கவுள்ளது. அந்தக் கூட்டத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், தமிழகத்தில் நிலவும் முக்கியப் பிரச்னைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்ட முக்கிய நிதி விவகாரங்கள் தொடர்பாகவும் அமைச்சர்கள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அறிக்கை அளிக்க ககன்தீப் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது.

அந்தக் குழு நேற்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. அந்தக் குழு அளித்த அறிக்கை தொடர்பாகவும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.