"மிகப்பெரிய வெற்றிப் பயணம்"
வெளிநாட்டுப் பயணம் குறித்துப் பேசிய முதலமைச்சர், “தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம் மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 17,613 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மொத்தமாக 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்தப் பயணத்தை ஒரு முதலமைச்சராக மட்டும் அல்லாமல், திராவிட இயக்கத் தலைவராகவும், பெரியாரின் பேரனாகவும், தமிழனாகவும் எல்லா வகையிலும் மறக்க முடியாததாக உணர்கிறேன்” என்றார்.
மேலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் படத்தை திறந்து வைத்தது தனக்கு பெருமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம் - முதலமைச்சர் பதிலடி
“வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாகத்தான் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. முதலீடுகளை ஈர்க்கும் இந்த முயற்சி சிலரால் பொறுத்துக்கொள்ள முடியாமல் புலம்புகின்றனர். சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்து வந்துள்ளோம். மத்திய அரசு எவ்வளவு புறக்கணித்தாலும் அதையும் மீறி நாங்கள் மௌனப் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்” என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்தார். வெளிப்படையான அரசு நிர்வாகம் மற்றும் மாநிலத்தின் சிறந்த கட்டமைப்பு வசதிகளை எடுத்துக் கூறி, எதிர்காலத்திலும் இதுபோன்ற பயணங்கள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
செங்கோட்டையன் குறித்து பதில்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதவி நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “நாம் ஆக்கப்பூர்வமாக பேசிக் கொண்டிருக்கிறோம். அக்கப்போரான விஷயங்கள் பற்றிப் பேச வேண்டாம்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.
LIVE 24 X 7









