சம்பவம் நடந்தது என்ன?
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், குட்டி கிராமனி தெருவைச் சேர்ந்த உஷா (45), வீட்டு வேலை செய்து வருபவர். நேற்று இவர் வேலைக்காக நடந்து சென்றபோது, இவரது வீட்டின் அருகே இருந்த வளர்ப்பு நாய் ஒன்று திடீரென உஷாவின் சேலையைப் பிடித்து இழுத்து, கீழே தள்ளி உள்ளது.
உடனே அதனுடன் இருந்த மற்ற மூன்று நாய்களும் சேர்ந்து உஷாவைக் குதறத் துவங்கியுள்ளன. இதில் உஷாவின் காது கிழிந்ததுடன், தலை, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கீறல் காயங்களும் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வேதனை
உஷா அலறவே, அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து அவரை நாய்களின் பிடியிலிருந்து மீட்டுள்ளனர். காயமடைந்த உஷா அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் உஷா கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாய்கள் என்னைக் குதறியபோது, அதன் உரிமையாளர் தடுக்க முன்வரவில்லை. பயத்தில் உயிரே போய்விட்டது. சேலையைப் பிடித்து கீழே தள்ளி, தலை, முகம், காது உள்ளிட்ட இடங்களில் குதறியதால், தற்போது தலையில் முடி சீவக்கூட முடியவில்லை. ஏற்கனவே இந்த நாய் மற்றொரு நபரை கடித்துள்ளது. இப்போது என்னையும் வெறிகொண்டு குதறிவிட்டது" என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும், அந்த நாயை மாநகராட்சி உடனடியாகப் பிடித்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
போலீஸ் விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாயின் உரிமையாளரான குமாரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மாநகராட்சி ஊழியர்களும் நாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
LIVE 24 X 7









