சம்பவம் நடந்தது எப்படி?
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவருக்கும், ஆதித்யன் என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னை காதலிப்பதாகவும், நிச்சயம் திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி நம்பவைத்துள்ள ஆதித்யன், சுமார் ஒன்றரை வருடங்களாகப் பழகி, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர், இரு வீட்டார் சம்மதத்துடன் வரும் டிசம்பர் 1, 2025 அன்று திருமணம் நடத்த நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
வரதட்சணை மிரட்டல்
இந்நிலையில், கடந்த மாதம் ஆதித்யனின் பெற்றோர், திருமணத்திற்கு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண், தனது பெற்றோருடன் ஆதித்யன் வீட்டிற்குச் சென்று கேட்டபோது, ஆதித்யன் மற்றும் அவரது பெற்றோர் தகாத வார்த்தைகளால் பேசி, திருமணத்தை மறுத்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆதித்யன் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிப் புகார் அளித்தார்.
போலீஸ் நடவடிக்கை
புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், போலீசார் முகப்பேரைச் சேர்ந்த ஆதித்யன் என்பவரைக் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட ஆதித்யன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
LIVE 24 X 7









