சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் துவங்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக, பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அப்பகுதியில் ஒரு ஏக்கர் 45 செண்ட் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கடந்த 2024 ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இதுசம்பந்தமாக ஆட்சேபங்களும் கோரப்பட்டன. ஆட்சேபங்கள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் முடியும் முன், பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படுகிறது என, 2024 ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பை எதிர்த்து பிரீமியர் லெதர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சட்டப்படி, முதல் அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் தான் வெளியிட வேண்டும். மாறாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், மாவட்ட அரசிதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்கள் ஆட்சேபங்களை கேட்ட மாவட்ட ஆட்சியரே, நிலம் பொது பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது என அறிவிக்க முடியாது. சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி, நிலம் கையகப்படுத்துவது தொடர்பான மாவட்ட ஆட்சியரின் இரு அறிவிப்புகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதேசமயம், சட்ட விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றி, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
LIVE 24 X 7









