முறைகேடு கண்டறியப்பட்ட முக்கிய ஆதாரங்கள்
அமலாக்கத்துறை தமிழக டிஜிபி-க்கு அனுப்பிய 232 பக்க ஆவணங்களில், பணி நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகளுக்கான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த மோசடியின் மூலமாக 2,538 பணியிடங்களுக்கான நியமனத்தில் அமைச்சர் கே.என். நேரு, அவரது சகோதரர்கள் கே.என். மணிவண்ணன், ரவிச்சந்திரன், மற்றும் உதவியாளர்களான டி. ரமேஷ், டி. செல்வமணி, கவி பிரசாத் ஆகியோர் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் நேருவின் சகோதரர்கள் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையின் போது, உதவியாளர்களின் செல்போன்களில் இருந்து மீட்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் இந்த மோசடியின் முக்கியச் சான்றுகளாக உள்ளன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை எழுத்துத் தேர்வை 2024 ஜூன் மாதம் நடத்தியது. இதன் இறுதி முடிவுகள் ஜூலை 4 அன்று வெளியிடப்பட்டன. ஆனால், முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, இடைத்தரகர்கள் அனுப்பிய விண்ணப்பப் படிவங்கள், ஆலோசனைக் கடிதங்கள் மற்றும் தேர்வு உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் ஆகியவை உதவியாளர்களின் கைப்பேசிகளில் இருந்து மீட்கப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதவியாளர் ரமேஷின் கைப்பேசியில் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பட்டியலில், ரவிச்சந்திரன், செல்வமணி உள்ளிட்டோரின் குறிப்புகளுடன், தேர்வர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அடையாளங்கள் இடப்பட்டிருந்ததாகவும், அந்தப் பட்டியலில் உள்ள பலர் நியமன ஆணைகள் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பணம் வசூல் மற்றும் ஹவாலா பரிமாற்றம்
பணியில் சேர விரும்பும் வேட்பாளர்கள், அமைச்சரின் சகோதரர்கள் அல்லது உதவியாளர்களான ரமேஷ், செல்வமணி, கவி பிரசாத் ஆகியோரை அணுகியதாகவும், லஞ்சம் செலுத்தத் தயாரானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வேலைவாய்ப்புக்காக முயற்சித்தவர்களிடம் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இடைத்தரகர்கள் தேர்வர்களின் விவரங்களைப் பகிர்ந்தபின், பணம் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட ரூ.10 நோட்டின் படங்களை, அந்த உதவியாளர்கள் வாட்ஸ்அப்பில் பரிமாறிக் கொண்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது ஹவாலா பரிமாற்றத்தின் குறியீடாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
முறைகேடான நியமனங்களுக்கான ஆதாரங்கள்
அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளரான செல்வமணி, முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே இடைத்தரகர்களிடமிருந்து தேர்வர்களின் விவரங்களைப் பெற்றதாகவும், முடிவுகள் வருவதற்கு முன்பே தேர்வில் வெற்றி பெற்றதற்கு செல்வமணிக்கு நன்றி தெரிவித்து ஒருவர் அனுப்பிய குறுஞ்செய்தியும் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்ப சுற்றில் தேர்ச்சி பெறாத ஒருவரை இறுதி மதிப்பெண் பட்டியலில் சேர்க்க, ரவிச்சந்திரனுடன் தொடர்பில் உள்ள கவி பிரசாத் உதவியதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தொழில் துறையின் இணை இயக்குநரின் மகளின் தேர்வை உறுதி செய்தது ரவிச்சந்திரனே என்றும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
அமலாக்கத்துறை இந்த ஆதாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய 232 பக்கம் கொண்ட ஆவணங்களைத் தமிழக டிஜிபி-க்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
LIVE 24 X 7









