ரகசியத் தகவல்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனர். அப்போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞர் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவரும் சுற்றுலாப் பயணிகள் போலத் திரும்பி வந்தனர். அவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமளித்ததால், இருவரையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
சூட்கேஸில் கஞ்சா
அதிகாரிகளின் கேள்விக்கு அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களது சூட்கேஸ்களைச் சோதனை செய்தனர். அப்போது, சூட்கேஸ்களின் அடிப்பகுதியில், காற்றுப்புகாத பாக்கெட்டுகளில் 'பச்சை பூக்கள், பழம்' எனப் போலியாகக் குறிப்பிட்டு, உயர் ரக கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இருவரிடம் இருந்து தலா 6 கிலோ என மொத்தம் 12 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றினர். சர்வதேசச் சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ.12 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையில், தாய்லாந்தில் இருந்து கஞ்சாவைக் கடத்தி வந்தால் பணம் தருவதாகக் கூறியதால், தாங்கள் அதைச் செய்ததாக அவர்கள் இருவரும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். இந்தச் சர்வதேசக் கஞ்சா கடத்தலுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும், இந்த கஞ்சாவை யாரிடம் ஒப்படைப்பதற்காகக் கடத்தி வந்தனர் என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
LIVE 24 X 7









