இந்த சொத்துகள் அனைத்தையும் வக்பு வாரியத்தில் நிர்வாகிகளாக உள்ள இஸ்லாமியர்கள் கண்காணித்து வருகின்றனர். அதேபோல், வக்பு வாரியங்கள் மாநில அரசுகளின் மேற்பார்வையில் செயல்படுகின்றன. இந்த நிலையில், ஏற்கனவே மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வக்பு சட்ட திருத்தம், இஸ்லாமியர்களின் உரிமையை பறிப்பதாக நாடு முழுவதும் எதிர்ப்புகளை கிளப்பி வருகிறது. இந்நிலையில் வேலூரில் உள்ள ஒரு கிராமத்தில் தாங்கள் வாழ்ந்த இடத்தை வக்பு வாரியம் அபகரிக்க நினைப்பதாக இந்து முன்னணியினரின் உதவியோடு மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் காட்டு கொல்லை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அதே பகுதியில் சையத் அலி சுல்தான் ஷா என்ற தர்காவும் இருந்து வருகிறது. இந்நிலையில் 150 குடும்பம் வசிக்கும் இப்பகுதி சையத் அலி சுல்தான் ஷா தர்காவின் வாக்ஃபு வாரிய சொத்து எனவும், இதில் வசிக்க வரி கட்ட வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது..
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக அப்பகுதியில் உள்ள இந்து முன்னணியினரை தொடர்புக் கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து, இந்து முன்னணியின் கோட்டத்தலைவர் மகேஷ் தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் சுப்பு லட்சுமியை சந்தித்து பிரச்னையை எடுத்துக்கூறி தங்கள் பெயரில் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் கூறுகையில், “தர்கா கொடுத்த நோட்டீஸ் சட்டவிரோதமானது என ஆட்சியரிடம் தெரிவித்தோம். விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாங்கள் இந்த நிலத்தில் வசிப்பதால் தர்காவுக்கு வரி கட்ட வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். இதனால் கரண்ட் பில் கட்டியிருந்தும் மின்சாரம் கிடைப்பதில்லை” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், சரியான விசாரணையை மேற்கொண்டு தங்களுக்கு கிடைக்க வேண்டிய நில பட்டாவுக்கு மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
LIVE 24 X 7









