சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் பயணிகளின் பயணத்தை இலகுவாக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு முக்கிய பகுதியாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அமைந்துள்ளது. 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் மிக குறுகிய கால இடைவெளிகளில் இயக்கப்படுகிறது.
அதாவது, மின்சார ரயில் சேவையை எடுத்துக் கொண்டால் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தான் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் ரயில்கள் தாமதமாக வருவதால் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். ஆனால், மெட்ரோ ரயில் சேவை அவ்வாறு இல்லை. 5 நிமிட இடைவெளி அல்லது 8 நிமிட இடைவெளிகளில் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ரயில்கள் மிக விரைவாக குறிப்பிட்ட ரயில் நிலையத்தை வந்து சேர்வதால் பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்கின்றனர். இதனால், பெரும்பாலான பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை தேர்வு செய்கின்றனர்.
இந்த நிலையில் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, நேற்று இரவு பத்து மணியளவில் சென்னை விம்கோ நகர்- விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இன்று (டிசம்பர் 24) விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலான நீல வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் 18 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை நீல வழித்தடத்தில் ஆறு நிமிட இடைவெளியிலும், டோல்கேட் முதல் விம்கோ நகர் டிப்போ வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை 6 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் வழக்கமான நேரப்படி ஏழு நிமிட இடைவெளியில் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் வரை இயக்கப்பட்டும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
LIVE 24 X 7









