தமிழ்நாடு

SIR குறித்து அச்சம் வேண்டாம்.. இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

SIR குறித்து அச்சம் வேண்டாம்.. இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!
Election Commission of India explains
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் தொடங்கவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இந்தப் பணிகள் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

வழக்கின் பின்னணி

சென்னை தியாகராய நகர் முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாரயணன் மற்றும் தாம்பரம் தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. வழக்கறிஞர் விநாயகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். அதில், தங்கள் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற விண்ணப்பங்களைப் பரிசீலிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கம்

தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிமன்றத்தில் விளக்கமளித்த தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான நிரஞ்சன் ராஜகோபால், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் நடைபெறும் என்றும், ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், "தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அக்டோபர் 27-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை (நவம்பர் 4) முதல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்தப் பணிகள் முழுமையான வாக்காளர் பட்டியலை மாற்றியமைக்க உள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் படிவங்கள் வழங்கப்படும், பூர்த்தி செய்த படிவங்களைச் சரிபார்த்து டிசம்பர் 9-ஆம் தேதி சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அப்போது வரைவுப் பட்டியலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம், அதை முழுமையாகப் பரிசீலித்த பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று" அவர் குறிப்பிட்டார்.

கடந்த 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு 10 முறை சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 2005-ஆம் ஆண்டுக்குப் பின் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வழக்கைத் தள்ளிவைத்த நீதிமன்றம்

மேலும், கரூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்கக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளதாகத் தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இந்த வாதங்களைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நவம்பர் 13-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டனர்.