தமிழ்நாடு

'டிட்வா புயல்': தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

'டிட்வா புயல்': தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'!
Red Alert
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'டிட்வா' புயல் தமிழகக் கடற்கரையை நோக்கி நெருங்கி வருவதால், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று (நவம்பர் 29) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. புயல் தற்போது வேதாரண்யத்திற்கு 140 கி.மீ தொலைவில் உள்ளது.

ரெட் அலெர்ட் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய 'டிட்வா' புயல், தற்போது வேதாரண்யத்திற்கு 140 கி.மீ தொலைவில் உள்ளது. புயல் தமிழக கடற்கரையை ஒட்டி வரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் டிசம்பர் 1-ம் தேதி எச்சரிக்கை

நாளை (நவம்பர் 30) திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கும் மற்றும் புதுச்சேரிக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 1-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.