வழக்கின் பின்னணி
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக - கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர் (STF), விசாரணை என்ற பெயரில் மலை கிராமப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தல், ஆண்களைச் சித்திரவதை செய்தல் போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.
புகார்களை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக அரசு பாதிக்கப்பட்ட 38 பேருக்கு முதலில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்கியது.
பின்னர், பாக்கி தொகையான ரூ.3 கோடியே 79 லட்சத்தை வழங்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழகத் தலைமைச் செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் அதிருப்தி
தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் இரண்டாவது தவணையாக ரூ.1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.8 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இழப்பீட்டுத் தொகையை வழங்கினாலும், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை எனச் சுட்டிக்காட்டினர்.
பாக்கி இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதற்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது என்றும் குறிப்பிட்டனர்.
நீதிபதிகளின் உத்தரவு
இழப்பீடு வழங்கக் கோரித் தமிழக அரசு வழக்குத் தாக்கல் செய்ததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "தொழில்துறையினருக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்கு தொடரலாமே தவிர, பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு எதிராக வழக்கு தொடரலாமா?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், "பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகை மக்களின் பணம், அரசு பணம் அல்ல. மக்களின் பணத்துக்கு அரசு அறங்காவலர் மட்டுமே" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ரூ.5 கோடி இழப்பீட்டுத் தொகையில் ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.2 கோடியே 41 லட்சம் போக, மீதமுள்ள ரூ.2 கோடியே 59 லட்சம் தொகையை உடனடியாக விடுவிக்கும்படி சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்த, தமிழகத் தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாக்கி இழப்பீடு தொகை வழங்கியது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
LIVE 24 X 7









