தமிழ்நாடு

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளிகள்.. முழு விவரம்!

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளிகள்.. முழு விவரம்!
Coimbatore Student sexual assault
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளைத் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட மூன்று பேரும், காயமடைந்த ஒரு காவலரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் மற்றும் விசாரணை

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் (நவ.2) நள்ளிரவு நேரத்தில் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர், மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாகக் குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குற்றவாளிகள் கைது மற்றும் துப்பாக்கிச் சூடு

தனிப்படையினர் நடத்திய விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரும் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. தலைமறைவாக இருந்த அந்த மூன்று பேரைப் பிடிக்கப் போலீசார் சென்றபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சந்திரசேகர் என்ற காவலருக்கு இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது.

காவலரை வெட்டிவிட்டு அவர்கள் தப்பி ஓட முயன்றபோது, போலீசார் தற்காப்புக்காகவும் அவர்களைக் கைது செய்வதற்காகவும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று பேர் காலிலும் குண்டு பாய்ந்த நிலையில், அவர்கள் கீழே விழுந்தனர்.

பிடிபட்டவர்கள் குறித்த விவரம்

பிடிபட்டவர்களை விசாரித்தபோது, அவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குணா (எ) தவசி, சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் என்பது தெரியவந்தது. இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகியோர் சகோதரர்கள் என்பதும், மூவரும் இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேர் மீதும் ஒரு கொலை வழக்கு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சிகிச்சை

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூன்று குற்றவாளிகளும், அரிவாள் வெட்டில் காயமடைந்த காவலர் சந்திரசேகரும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நள்ளிரவு துப்பாக்கிச் சூடு சம்பவம், கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.