நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்த அமலாகத்துறைக்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தெரிவிக்க சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை. அந்த விவரங்களை வழங்கினால், ஆதாரங்களை மறைக்கவும், அழிக்கவும் வாய்ப்புகள் உள்ளதால் வழக்குகளின் விவரங்களை வழங்க உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
சோதனை என்பது ஆரம்பக்கட்ட நடவடிக்கை தான். அதனால் டாஸ்மாக் நிர்வாகம் நிவாரணம் கோரி அமலாக்கத் துறையை நாடலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், சோதனை உத்தரவில், டாஸ்மாக் அதிகாரிகளிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்று கொள்ள முடியாது. அரசு ஊழியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அது அவர்களின் கடமை. சோதனைக்கான உத்தரவு நகலை வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை நிர்ணயம், பார்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக 100 கேள்விகள் எழுப்பி வாக்குமூலங்கள் பதிவு செய்து கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இது சம்மந்தமாக டாஸ்மாக் அதிகாரிகள் யாரும் குற்றம்சாட்டவில்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சோதனையின் போது அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக, அரசு யூகத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டி உள்ளது. சட்டத்தின் படி தான் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை வலுக்கட்டாயமாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூற முடியாது. திடீர் சோதனைகள் நடத்தும் போது, தகவல்கள் கசிவதையும், ஆதாரங்கள் அழிக்கப்படுவதையும் தடுக்க இதுபோன்று ஊழியர்கள் சிறைபிடிக்கபடுவது உண்டு.
அது துன்புறுத்தல் ஆகாது எனக் கூறிய நீதிபதிகள், சோதனையின் போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு உணவு, ஓய்வு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு எந்த வலுவான ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் இல்லாத இந்த குற்றச்சாட்டுகளை ஏற்று கொள்ள முடியாது. சோதனை சட்டப்பூர்வமாக தான் நடத்தப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
மாநில போலீசார் சோதனை நடத்தும்போது தங்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் யாரும் வழக்கு தாக்கல் செய்ததில்லை. அதற்காக சோதனையின் போது விதிமீறல் இல்லை என்று அர்த்தம் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், தங்கள் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்தால் தனிப்பட்ட அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்யலாம். அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் இந்த வழக்கை ஏன் தாக்கல் செய்தன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.
அமலாக்கத் துறை விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோ என்ற கேள்வி எழுகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தடுக்க அரசு முயல்வது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளனர். டாஸ்மாக்கிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையான சோதனையை எதிர்ப்பது குற்ற நீதி பரிபாலனத்தின் அஸ்திவாரத்தை பாதிக்கும். சோதனைக்கு அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்று கொள்ள முடியாது. கூட்டாட்சி தத்துவம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்றும் கூட்டாட்சி தத்துவத்தை மக்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டுமே தவிர தேசத்திற்கு எதிரான குற்றம் குறித்த விசாரணையை தடுக்க பயன்படுத்த கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சில அசெளகரியங்கள் ஏற்படுவது இயல்பு. அதற்காக நாட்டு மக்களின் பொருளாதார உரிமைகளுக்கு இணையாக கருத முடியுமா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
LIVE 24 X 7









