திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, தனது உறவினர் திருமணத்திற்காகக் காஞ்சிபுரத்தில் தங்கி, அங்கிருந்து தினமும் கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம், காஞ்சிபுரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி வந்த பேருந்தில் பயணம் செய்தபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், மாணவி உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
திடுக்கிட்டு எழுந்த மாணவி, உடனடியாகப் பேருந்து ஓட்டுநரிடம் புகார் தெரிவித்தார். ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில், விருகம்பாக்கம் போலீசார் பேருந்து வந்ததும், மதுரவாயல் தனியார் பல்கலைக்கழகம் அருகே காத்திருந்து, பாலியல் தொல்லை கொடுத்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் திருச்சியைச் சேர்ந்த ராகேஷ் என்பதும், மத்திய வேளாண் துறையில் விற்பனை அதிகாரியாகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராகேஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
LIVE 24 X 7









