சர்ச்சைக்குரிய பதிவு
கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வந்தனர். இந்தச் சூழலில், தவெக தேர்தல் பிரிவுப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், அரசின் அடக்குமுறைக்கு எதிராக இலங்கை, நேபாளம் நாடுகளைப் போல 'Gen Z புரட்சி' ஏற்படும் எனத் தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக, ஆதவ் அர்ஜூனா மீது கலவரத்தைத் தூண்டுவது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கை ரத்து செய்ய ஆதவ் அர்ஜூனா கோரிக்கை
தன் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கைக் ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜூனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சமூக வலைதளப் பதிவை 34 நிமிடங்களில் நீக்கிவிட்ட நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய எக்ஸ் பதிவு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் பதிவிடப்படவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், காவல்துறை தன் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இந்த மனு, தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது ஒரு குற்ற வழக்கு என்பதால், இந்த மனுவைச் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நவம்பர் 5-ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரும் எனப் பட்டியலிட உத்தரவிடப்பட்டது.
LIVE 24 X 7









