தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டம்: ஸ்பீக்கர் சத்தத்தை சாதகமாக பயன்படுத்தி சிறுமியை சீரழித்த கொடூரன்!

சென்னையில் புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின்போது 7 வயது சிறுமி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்: ஸ்பீக்கர் சத்தத்தை சாதகமாக பயன்படுத்தி சிறுமியை சீரழித்த கொடூரன்!
சிறுமி பாலியல் வன்கொடுமை
சென்னையில் புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின்போது 7 வயது சிறுமி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தம் கேட்டு வெளிச்சத்துக்கு வந்த கொடூரம்

திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிப்பவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒன்று கூடி, ஸ்பீக்கர்கள் அமைத்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தச் சமயத்தில் 7 வயது சிறுமி திடீரென காணாமல் போனார். புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து ஸ்பீக்கர் அணைக்கப்பட்ட பிறகு, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது, அங்கு வசிக்கும் மதிவாணன் என்பவரது வீட்டிலிருந்து அலறல் சத்தம் வந்ததைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் மதிவாணனைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போக்சோ சட்டத்தில் வழக்கு - சிறையில் அடைப்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மதிவாணனை கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். சிறுமி பெற்றோருடன் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வந்தது தெரிந்துகொண்டே மதிவாணன் இந்தக் கொடூரச் செயலைச் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் மதிவாணன் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், கைது செய்யப்படும் போது தப்பிச் செல்ல முயன்றதில் தவறி விழுந்ததால் மதிவாணனுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.