விளையாட்டு

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு.. நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவிப்பு!

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு.. நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவிப்பு!
Kane Williamson retires from T20I
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரரான கேன் வில்லியம்சன், 2026 டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் கேப்டனாக நீண்ட காலம் இருந்த வில்லியம்சன், இனிமேல் ஒருநாள் (ODI) மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கேப்டனாக கேன் வில்லியம்சன்

டி20 சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்துக்காக அதிகபட்சமாக 2575 ரன்கள் எடுத்துள்ள சாதனையுடன் வில்லியம்சன் ஓய்வு பெறுகிறார். அவர் மொத்தமாக 93 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக இருந்த இவர், 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அணியில் தனது பங்களிப்பைக் குறைத்துக்கொண்டார். தற்போது டி20 அணியின் கேப்டன் பொறுப்பை மிட்செல் சான்ட்னர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வில்லியம்சன் கேப்டனாகச் செயல்பட்ட 75 டி20 போட்டிகளில், நியூசிலாந்து அணி நிலையான வெற்றிகளைப் பெற்று, 2016 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பைகளின் அரையிறுதிக்கும், 2021 இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. ஆனால், கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஓய்வுக்கான காரணம்

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகுவதற்கு இதுவே சரியான தருணம் என்று வில்லியம்சன் விளக்கமளித்துள்ளார். "நீண்ட நாட்களாக இந்த அணியில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அனுபவங்கள் மற்றும் நினைவுகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்று அவர் கூறினார். "வரவிருக்கும் தொடர்கள் மற்றும் 2026 டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் அணிக்கு இது தெளிவான வாய்ப்பைக் கொடுக்கும். மிட்செல் சான்ட்னர் ஒரு சிறந்த கேப்டன். இனி டி20 வடிவத்தில் அணியை முன்னோக்கிக் கொண்டு செல்லும் நேரம் அவர்களுக்கானது," என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வில்லியம்சன் உலகெங்கிலும் உள்ள டி20 ஃப்ரான்சைஸ் லீக்குகளில் தொடர்ந்து விளையாடலாம். இருப்பினும், அவர் சமீபத்தில் ஐபிஎல் அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு வியூக ஆலோசகராகச் மியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.