விளையாட்டு

IPL 2026: முஷ்தபிசுர் ரகுமானை விடுவிக்க KKR அணிக்கு அறிவுறுத்தல்!

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

IPL 2026: முஷ்தபிசுர் ரகுமானை விடுவிக்க KKR அணிக்கு அறிவுறுத்தல்!
KKR release Mustafizur Rahman From IPL
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்த நிலையில், அவருக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகள் காரணமாக அவரை அணியில் இருந்து விடுவிக்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

வங்கதேச விவகாரத்தால் சர்ச்சை

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராகத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதைக் கண்டித்து, பல்வேறு இந்து அமைப்புகள் ஐ.பி.எல். போட்டிகளில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாடக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேசத் துரோகி என்று பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகின்றன.

பிசிசிஐயின் அறிவுறுத்தல்

இந்தச் சர்ச்சைகளின் பின்னணியில், வங்கதேச வீரர் முஷ்தபிசுர் ரகுமானைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியுள்ளது. இது தொடர்பாகப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக, வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு கேகேஆர் அணிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவருக்குப் பதிலாக மாற்று வீரர் யாரையாவது கேட்டால், அதை அனுமதிப்போம்," என்று தெரிவித்தார்.

முஷ்தபிசுர் ரகுமான் இதுவரை ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டங்களில் விளையாடி 65 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவர் கடந்த காலங்களில் ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான், சென்னை அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார்.