விளையாட்டு

சட்டவிரோத சூதாட்ட செயலி: ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா சொத்துகள் முடக்கம்!

சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சட்டவிரோத சூதாட்ட செயலி: ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா சொத்துகள் முடக்கம்!
ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா சொத்துகள் முடக்கம்
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலியான '1xBet' தொடர்பிலான பணமோசடி வழக்கில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குச் சொந்தமான மொத்தம் ரூ.11.14 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

முடக்கப்பட்டுள்ள சொத்துகள்

இது தொடர்பாக அமலாக்கத்துறை, பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிக முடக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஷிகர் தவானுக்குச் சொந்தமான ரூ.4.5 கோடி மதிப்புள்ள அசையாச் சொத்துக்கள், சுரேஷ் ரெய்னாவின் ரூ.6.64 கோடி மதிப்புள்ள முதலீடுகள் (Mutual Fund) ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு

இந்த விவகாரத்தில், ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும், 1xBet செயலியை அதன் பெயரில் உள்ள பிற மாற்று பிராண்டுகளையும் (Surrogate Brands) விளம்பரப்படுத்துவதற்குத் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களுடன் தெரிந்தே ஒப்பந்தம் செய்துள்ளதாக அமலாக்கத்துறையின் விசாரணை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விளம்பரச் செயல்பாடுகள் அனைத்தும் இந்தியாவில் அணுகக்கூடிய சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட சேவைகளை ஊக்குவிக்கும் நிறுவனங்களுடன் தொடர்புடையவை என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

விசாரணையில் உள்ள பிரபலங்கள்

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை பல முக்கியப் பிரபலங்களிடமும் விசாரணை நடத்தியுள்ளது. இந்த சட்டவிரோதப் செயலியின் விளம்பரத் தொடர்புகள் குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, நடிகர்கள் சோனு சூட், ஊர்வசி ரவுடேலா, முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மிமி சக்ரவர்த்தி மற்றும் பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா உள்ளிட்ட பலரிடமும் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

அந்நிய நிறுவனங்களிலிருந்து இந்தியக் கணக்குகளுக்குப் பணம் எவ்வாறு பரிமாற்றம் ஆனது என்பதைக் கண்டறிய, இந்த பிரபலங்களின் நிதி பரிவர்த்தனைகள், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பிரச்சாரங்களை அமலாக்கத்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.