திருச்சி மத்திய வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஊழல் குற்றச்சாட்டு குறித்த பதில்
அமலாக்கத்துறை தனது சோதனையின்போது கிடைத்த சில ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு தமிழகக் காவல்துறைக்குக் கடிதம் எழுதியிருப்பது குறித்து அமைச்சர் பேசியதாவது:
"அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் பொழுது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அது குறித்து ஆய்வு செய்யுமாறு அமலாக்கத்துறை தமிழகக் காவல்துறைக்குக் கடிதம் எழுதி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள்.
முறைகேடு நடந்ததா? என்பதை போலீசார் விசாரிப்பார்கள். ஆனால் நான் எந்தவித தவறும் செய்யவில்லை. விசாரணையில் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து காட்டுவோம். தி.மு.க.வை மிரட்டி பார்ப்பதற்காகக் கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம். தி.மு.க.வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை" என்றார்.
அரசியல் விமர்சனங்களுக்குப் பதில்
எதிர்க்கட்சிகளின் விமர்சனம் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வளவுதான். எங்கள் கூட்டணியில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்துதான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை தி.மு.க.-வின் பி. டீம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி அவர் வாயில் வந்ததை பேசிக்கொண்டு உள்ளார்" என்று விமர்சித்தார்.
மேலும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நேர்மையாக நடக்க வேண்டும் என்றும், வேண்டுமென்றே பல வாக்காளர்களைச் சேர்ப்பதையும் நீக்குவதையும் தான் தி.மு.க. எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
 
           LIVE 24 X 7
LIVE 24 X 7
               
               
               
               
 









 
  
  
  
  
  
 