அரசியல்

பனையூர் தவெக அலுவலகத்தில் பதற்றம்: விஜய் கார் முற்றுகை!

தூத்துக்குடி அதிருப்தி நிர்வாகிகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய் காரை தாக்கி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பனையூர் தவெக அலுவலகத்தில் பதற்றம்: விஜய் கார் முற்றுகை!
Vijay car blocked
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில்உட்கட்சி நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் நியமனம் தொடர்பான அதிருப்தியால், கட்சித் தலைவர் விஜயின் காரை நிர்வாகிகள் முற்றுகையிட முயன்றனர்.

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் நியமனத்தில் சிக்கல்

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று (டிசம்பர் 23) பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அந்த நியமன அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் அதிக அளவில் காலை முதலே அலுவலகத்தில் குவிந்திருந்தனர்.

விஜயின் காரை முற்றுகையிட முயற்சி

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளில் ஒரு பிரிவினர் பதவி வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், மதியம் 1.30 மணியளவில் தவெக தலைவர் விஜய், கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது, தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென விஜயின் காரை முற்றுகையிட முயன்றனர்.

பவுன்சர்கள் குவிப்பால் பரபரப்பு

முற்றுகையிட முயன்ற அதிருப்தி நிர்வாகிகள் விஜயின் காரை அடித்ததால், அலுவலக வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டிருந்த பவுன்சர்கள், உடனடியாகச் செயல்பட்டுப் பெண் நிர்வாகி மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர், விஜயின் காரை மீட்டுக் கட்சி அலுவலகத்திற்கு உள்ளே அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் பனையூர் தவெக அலுவலகம் இன்று பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.