அரசியல்

அயோத்தி போல தமிழ்நாடு ? நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி பதிலடி!

அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதற்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

அயோத்தி போல தமிழ்நாடு ? நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி பதிலடி!
Kanimozhi and Nainar Nagendran
"தமிழ்நாடு அயோத்தி போல மாற வேண்டும்" என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்குப் பதிலளித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

நயினார் நாகேந்திரனின் கருத்து

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "தமிழகத்தை அயோத்தியாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது" என்று முன்னர் குற்றம் சாட்டியது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "அயோத்தி இந்தியாவில்தானே இருக்கிறது. அயோத்தி ஒன்னும் இங்கிலாந்திலோ ஐரோப்பாவிலோ இல்லையே... இந்தியாவில்தான் உள்ளது. தமிழ்நாடு அயோத்தி போல வருவதில் தவறில்லை. ராமர் ஆட்சி பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி ராமர் ஆட்சிபோல வர வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

கனிமொழியின் பதிலடி

நயினார் நாகேந்திரனின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் ஆர்எஸ்எஸ் - பாஜகவை படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா? கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.