அரசியல்

திமுகவை சீண்டிய பிரவீன் சக்கரவர்த்தி: அறிவாலயத்துக்கு ஆதரவாக வரிசையில் வரும் காங்கிரஸ் தலைகள்!

திமுக அரசை சீண்டும் வகையில் ராகுல்காந்தியின் தூதர் பிரவீன் சக்கரவர்த்தி பதிவு, காங்கிரசில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவை சீண்டிய பிரவீன் சக்கரவர்த்தி: அறிவாலயத்துக்கு ஆதரவாக வரிசையில் வரும் காங்கிரஸ் தலைகள்!
Praveen Chakravarthy Vs TN Congress
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் கடன் அதிகமாக வைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தின் நிலுவை கடன், தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது.

ஆனால் தற்போது தமிழ்நாட்டின் கடன், உ.பி-யைவிட 2 மடங்கு அதிகம். இந்திய மாநிலங்களில் வட்டி சுமை அதிகமாக கொண்ட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடன்/ உள்நாட்டு உற்பத்தி, கொரோனா காலத்தை விட அதிகமாக உள்ளது தமிழ்நாட்டின் கடன்சுமை கவலைக்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.

பிரவீன் சக்கரவர்த்திக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்பிக்கள்

ராகுல்காந்தியின் ஆலோசகராக பார்க்கப்படும் பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த கருத்து திமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

மத்திய அரசின் நிதி கொள்கைகளும் இங்கு முக்கியம். தமிழ்நாடு அதிக வரிப்பணம் ஈட்டினாலும், நிதிப் பகிர்வில் மிகக் குறைவாகவே பெறுகிறது; உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமான நிதிப் பரிமாற்றங்களைப் பெறுகின்றன. இயற்கை பேரிடர்கள், சர்வ சிக்‌ஷா அபியான் போன்ற திட்டங்களிலும் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி மறுக்கப்படுகிறது. எனவே, கடனை வளர்ச்சி, தனிநபர் குறியீடுகள், வரிப்பங்களிப்பு Vs நிதிப்பகிர்வு, நிர்வாகத் தரம் ஆகிய சூழல்களுடன் விவாதிக்க வேண்டும். என ஜோதிமணி பிரவீன் சக்கரவர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

செல்வப்பெருந்தகை அட்டாக்

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பர்வீன் சக்கரவர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காங்கிரஸ் கட்சி தெளிவாக இருக்கிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பவர்களின் கனவு பலிக்காது. பிரவீன் சக்கரவர்த்தி ஆர்எஸ்எஸ், பாஜகவின் குரலாக பேசுகிறார்" என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே தவெக தலைவர் விஜயை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசியது, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மீண்டும் திமுகவை சீண்டும் வகையில் பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு, அறிவாலயத்தை மேலும் கோபம் அடைய செய்துள்ளது. இதனால் காங்கிரசு எம்பிகளை தொடர்ந்து செல்வப்பெருந்தகை வைத்து பிரவீன் சக்கரவர்த்தி எதிரான ஆட்டத்தை அறிவாலயம் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.